Author: வந்தியத்தேவன்
•4:38 PM
வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது.



வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது.

"கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள்.

"உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "சரி சரி துரும்பைக் கவிழ்" என்றான்.

"டேய் அழகா நீதானே இறக்கம் நல்ல தாளாப் பார்த்து இறக்கு" மாறன்.

"நல்ல தாளோ, சரி இந்தா டயமண்ட் வீறு" என அழகன் டயமண்ட் ஜக்கை இறக்கினான்,

"நல்ல காலம் நானும் உந்த கோதாரி டயமண்ட்டில் தான் கேட்டனான் தப்பிட்டேன்" என்ற படி பிரபா டயமண்ட் மணலை இறக்கினான்.

"அடப்பாவி மணலை மட்டும் வைத்துக்கொண்டே கேட்டிருக்கின்றாய் தப்பிவிட்டாய்"

"உவன் ரவி நல்லா அடுக்குவான் ஆனால் ஒருநாளும் வெல்ல அடுக்குவதில்லை எதாவது ஒரு தாளை மாத்தி அடிக்கி குழப்பிபோடுவான்" என ரவியின் அடுக்கை குறை சொன்னான் சீலன்.

முதல் ஆட்டம் முடிந்தது, அழகன் கார்ட்சை புறிக்கத் தொடக்கினான். கடைசிக் கை போட்டதுதான் "மடக்கு" என்றான் பிரபா.

"ஆடத்தன் அவங்களைக்கு அணைஞ்சுபோச்சு, எங்கடை பக்கம் கலாவரை ஆனாலும் ஒருதனும் கேட்கவில்லை" சலிப்புடன் அடுக்கல் மன்னன் ரவி.

ரவி சொன்னது போல பிரபாவும் ஆடத்தன் வீறை மேசையில் ஓங்கி அடித்தான். அவனுக்கு பக்கத்தில் இருந்த மாறன் ஆடத்தன் ஆசை இறக்கவும் பிரபா "கோட்"
என ஏனைய தாள்களை கோட்டடித்தான்.

இந்த முறை நீங்கள் மடக்கினாலும் அடுத்த முறை நான் கம்மாறீஸ் அடிக்கின்றேன் இது சீலன்.

டேய் நீ இனத்துக்கு இனம் போடுகின்ற சின்னபெடியன் கம்மாறிஸ் அடிக்கபோறீயோ என அவனை மாறன் நக்கலடித்தான்.

இப்படியே ஒருத்தரை ஒருதர் நக்கலடித்தபடி பெரிதாக அலாப்பல்கள் இல்லாமல் நிறைவடைந்தது.

சொல் விளக்கம் :

கடதாசிக் கூட்டம் :

கார்ட்ஸ் விளையாடுபவர்களை எங்கடை ஊரில் கடதாசிக் கூட்டம் என்பார்கள்.

கையள் :

கார்ட்ஸ் விளையாட்டில் பங்குகொள்ளும் நபரை கை என அழைப்பார்கள். உதாரணமாக "மச்சான் ஒரு கை குறையுது நீயும் வா" என்றால் ஒராள் குறைவாக உள்ளது என்பதாகும்.

கேள்வி :

விளையாட்டுத் தொடங்கும்போது கார்ட்சினை பங்கிட்டவருக்கு பக்கத்தில் இருப்பவர் பெரும்பாலும் இந்தக் கேள்வியுடன் தான் ஆரம்பிப்ப்பார். புள்ளிகள் அடிப்படையில் இது 50 (சாதாரண 50) ஆகும். இதன் ஆங்கிலப் பிரயோகம் தெரியவில்லை.

உதவி ;

கேள்வி கேட்டவரின் எதிரணி உறுப்பினர் (பெரும்பாலும் கேள்வி கேட்டவருக்கு அருகில் இருப்பவர்) கேட்பது இதன் பெறுமதி சாதாரண 60 புள்ளிகள் ஆகும்,

மேலே :
ஒருவர் தன்னால் எந்தக் கேள்வியும் கேட்கமுடியாமல் தன் அணியைச் சேர்ந்த ஏனையவர்களிடம் விட்டுவிடுவது,

தாள் :

சீட்டு ஒன்றை தாள் என்பார்கள். உதாரணமாக நல்ல தாள் வாய்க்கவில்லை.

துரும்பு :

Trump பே துரும்பு எனப்படுகின்றது. துருப்புச் சீட்டின் மருவிய வடிவம் இந்த துரும்பாகும்.

வீறு : ஜாக்(Jacks).

மணல் : ஒன்பது (Nine)

ஆசு : Ace

ஆஸ் (Ace) என்பதன் மருவிய பதம்

அடுக்குதல் :

அடுக்குதல் என்பது சீட்டினை ஒருவிதமான வரிசைப்படுத்தலில் அடுக்குதல். ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தாள்கள் செல்லும், சிலவேளைகளில் அடுக்கு பிழைத்தால் தோல்வி தான்.

புறித்தல் :
சீட்டினை அனைத்து விளையாடும் உறுப்பினர்களிற்க்கும் பங்கிடுதல்.

மடக்கு :

ஒருவர் தன்னுடைய கையில் இருக்கும் தாள்கள் அனைத்தும் எதிரணி உறுப்பினர்களால் வெட்டமுடியாமல் விளையாடுவது.

கோட்(Coat) :

மடக்கியவர் கடைசியாக கோட் எனச் சொல்லி தன்னுடைய தாளை அல்லது தாள்களை இறக்கவேண்டும்.

ஆடத்தன் : Hearts

உவீத்தன் : Diamonds

கலாவரை : Clubs

ஸ்பேட் (Spades) அதே பெயரில் தான் அழைக்கப்படுகின்றது.

கம்மாறிஸ் : Caps

ஒரு அணியினருக்கு சகல தாள்களும் கிடைத்தால் கடைசியாக அடிப்பது கம்மாறீஸாகும்.

சில சொற்களின் ஆங்கிலச் சொற்கள் தெரியவில்லை. மேலதிக தகவல்களை கார்ட்ஸில் வித்துவம் கூடிய நண்பர்கள் சொல்லவும். இந்த 304 விட ரம்மி, 31 (முப்பத்தியொன்று), கழுதை, பிரிஜ்(Bridge) போன்ற ஏனைய கார்ஸ்ட் விளையாட்டுகளும் பிரபலம் வாய்ந்தவை.
This entry was posted on 4:38 PM and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On July 19, 2010 at 4:56 PM , வள்ளுவம் said...

மிகவும் பயனுள்ள தகவல்… .... வாழ்த்துக்கள்....

 
On July 19, 2010 at 8:12 PM , Pragash said...

நான் இந்த உலகிற்கு வந்து மூன்று தசாப்தங்கள் ஆகப்போகுது, ஆனாலும் கடதாசி விளையாட்டு எனக்கு சுத்தம். அசத்திறீங்கள் வந்தி.

 
On July 19, 2010 at 11:13 PM , சஞ்சயன் said...

இந்த கோதாரிவிழுந்த 304 விளையாட்டு பழகி நான் பட்ட பாட்டை ஒரு புத்தகமாகவே எழுதலாம். தொடந்து 18 மணித்தியாலங்கள் விளையாடிய சரித்திரமும் இருக்கு. நண்பர்கள் விரோதியாகியும் இருக்கிறார்கள். இது விளையாடிய இடத்தில் கனக்க பெடியள் கூடுறாங்கள் என்று கேள்விப்ட்டு ஆமி வர நாங்க பிடறில பின்னங்கால் பட ஓடின கதையும் நடந்தது.

அருமையான பதிவு

 
On July 20, 2010 at 12:26 AM , Mathuvathanan Mounasamy / cowboymathu said...

304 ஐ நாங்கள் 6 அல்லது 4 பேராகத்தான் விளையாடுவோம். 12 பேர் எப்பிடி விளையாடுறது?

டைமனை உறீத்தன் எண்டும் சொல்லுறனாங்கள்.

 
On July 20, 2010 at 12:37 AM , ARV Loshan said...

அட அட அட..
என்ன ஒரு தெளிவாக்கம்.

நானும் 304 பிரிச்சு மெய்ந்துள்ளேன். கொஞ்சக் காலம் ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரமாவது விளையாடுவோம். ஆனால் இந்த சொற்கள் எல்லாமே புதுசே..

வி யூஸ் இங்கிலீஸ் வேர்ட்ஸ் :)

 
On July 20, 2010 at 1:21 AM , SShathiesh-சதீஷ். said...

ஹா ஹா விளையாட்டா விளையாடுவோம் தகவலுக்கு நன்றி வந்தி அண்ணா.

 
On July 20, 2010 at 3:34 AM , கானா பிரபா said...

வந்தி

உண்மையைச் சொல்லப் போனா கார்ட்ஸ் விளையாடேக்க பின்னுக்கிருந்து ஒற்றனாக இருந்தது தவிர வேறென்றும் அறியோம் பராபரமே

 
On July 20, 2010 at 9:25 AM , வர்மா said...

காட்ஸ் விளையாட்டில் 304 மட்டுமல்ல 3 காட்ஸ் , ரம்மி என்று பலவிளையாட்டுக்கள உண்டு
அன்புடன் வர்மா

 
On July 21, 2010 at 1:58 AM , ஹேமா said...

அப்பா லீவில வீட்டை வந்தால் அடிக்கடி எங்கட ஒன்றுவிட்ட பெரியண்ணா வீட்டில பெரிய கூட்டத்துடன் ஐக்கியாமாயிடுவார்.
அடுத்த நாள் சாப்பாடு ,சண்டை,
அம்மாவின் மூஞ்சியிண்ட நீளம் எல்லாம் உங்கட பதிவோட கலந்து கட்டி ஞாபகம் வருது.

 
On July 23, 2010 at 8:28 AM , வாசுகி said...

304 .... வாசிக்கவே ஒரே சந்தோசமாய் இருக்கு.
இப்பவும் friends meet பண்ணும் போது கட்டாயம் விளையாடுவம்.
ஒருவருக்கு 304 விளையாட தெரிந்தாலே அவர்களுடன் நான் friend ஆகி விடுவேன்.:))

சொல் விளக்கம் அருமை.:))

 
On August 18, 2010 at 12:28 PM , Suresh SL said...

Spades are called "Skoppan"

 
On August 21, 2011 at 3:17 AM , Unknown said...

கன களம் 304 விழையாடி. ஞாபக படுத்தியதற்கு நன்றி.